ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும், அதே நேரத்தில், லேப்டாப் அளவுக்கு விலை அதிகமாகவும் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள், தாராளமாக டேப்லெட்டைத் தேர்வு செய்யலாம்.
டேப்லெட்கள் பெரும்பாலும் வாசிப்பதற்கானவை, விளையாடுவதற்கானவை, அலுவலக வேலைகளுக்கானவை, குழந்தைகளுக்கானவை என ஒரு குறிப்பிட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாசிப்புத் தேவைக்காகத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் திரையின் தரம் சற்று மேம்பட்டு இருக்கும்.
ஆனால், அவை விளையாடுவதற்காக பயன்படுத்தப்படும் டேப்லெட்களின் ரேம் மற்றும் பிராசஸரைக் கொண்டிருக்காது. குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் பயன்பாடு, அவர்களது கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில் மட்டுமே இருக்கும். அவற்றில் மற்ற வேலைகளை திறம்படச் செய்யமுடியாது. எனவே, உங்களின் தேவையைப் பொறுத்து டேப்லெட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
டேப்லெட் திரையின் (ஸ்க்ரீன் சைஸ்) அளவையும், தரத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். 7 இன்ச் முதல் 10 இன்ச் வரை திரையின் அளவு கொண்ட டேப்லெட்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப திரையின் அளவை முடிவு செய்யலாம். டேப்லெட் வாங்கும்போது அதன் பிக்சல் குறைந்தபட்சம் 250 ஆகவாவது இருக்க வேண்டும். டேப்லெட் இயங்கத் தேவையான சக்தியை அளிப்பது பேட்டரிதான். அதுவும் குறிப்பாக டேப்லெட்டில் திரையின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், அதிக பேட்டரித் திறன் இருக்கும் டேப்லெட்டை வாங்குவது நல்லது.
டேப்லெட்களைப் பொதுவாக சிம் கார்டு பயன்படுத்தக்கூடியவை, சிம் வசதி இல்லாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டேப்லெட்கள், சிம் கார்டு பயன்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிம் இல்லாத டேப்லெட்களின் விலையைவிட இவற்றின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிம் வசதி இல்லாத டேப்லெட்கள் பொதுவாகக் குறைந்த விலைக்கும், அதே சமயத்தில் அதிக வசதிகளுடனும் கிடைக்கும்.
இயங்குதளம்:- டேப்லெட்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐ.ஓ.எஸ். என அனைத்து வகையான இயங்குதளங்களிலும் கிடைக்கின்றன. ஆனால், ஆண்ட்ராய்டு டேப்லெட்களே சந்தையில் அதிகமாகக் கிடைக்கின்றன. சாதாரண உபயோகத்திற்கு ஆண்ட்ராய்டு டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் விலையும் குறைவு. மற்றபடி, அலுவலக உபயோகத்திற்கு என்றால் விண்டோஸ் அல்லது ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இயங்கும் டேப்லெட்களை தேர்ந்தெடுக்கலாம்.
பிராசஸர், ரேம் மற்றும் மெமரி:- டேப்லெட்டைத் தேர்வு செய்யும்போது அதன் ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி ஆகியவை அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒரு சில டேப்லெட்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி இருப்பதில்லை. குறைந்தபட்சமாக 2 ஜி.பி. ரேம் இருக்குமாறு வாங்கினால் சிறப்பு!
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
Post a Comment