மாறப்போகும் பேஸ்புக் பக்கம்: இனி இதற்காக செலவிடும் நேரம் குறையும்..?

மாறப்போகும் பேஸ்புக் பக்கம்: இனி இதற்காக செலவிடும் நேரம் குறையும்..?
சமூக வலைத்தளங்களின் அரசனாக திகழும் பேஸ்புக் நிறுவனமானது அதன் நியூஸ் பீட் பக்கத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று தெரிய வருகிறது.


இதற்கு மாறாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகளுக்கு இடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதன் விளைவாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளின் முக்கியத்துவம் குறைவதை காணலாம் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அடுத்து வருகின்ற வாரங்களில், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
வர்த்தக நிறுவனங்கள், பிராண்ட்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் குவிந்து ஒவ்வொருவரையும் இணைப்பதற்கு வழி செய்யும் தருணங்களை ஆக்கிரமிப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக மார்க் சக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நலவாழ்வை வளர்ப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புணர்வை அவரும், அவருடைய குழுவினரும் உணர்ந்துள்ளதாக சக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
பொது மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமெனில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை பற்றி நெருங்கிய தொடர்புடைய குழுக்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் நடைபெறுவதைபோல இந்த கருத்துக்கள் சமூக ஊடாடலை தூண்டுவதாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஃபேஸ்புக் நிறுவனம் பதிவிட்டுள்ள இன்னொரு தனிப்பட்ட பதிவில், அதிக உரையாடல்களை தூண்டுகின்ற காணொளி பதிவுகளை மேலதிக எடுத்துக்காட்டாக வழங்கியுள்ளது.
“இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், மக்கள், பேஸ்புக் பக்கத்தில் செலவிடும் நேரம் மற்றும் இந்த வலைதளத்தில் ஈடுபடும் அளவும் குறையும்” என்று சக்கர்பெர்க் மேலும் கூறியுள்ளார்.
“ஆனால். ஃபேஸ்புக் பக்கத்தில் செலவிடப்படும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்குமெனவும் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார் சக்கர்பெர்க்.

Post a Comment

Previous Post Next Post