மருதாம்பூலம் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் வரலாறு
ஆரம்ப காலத்தில் பிரபஞ்சத்தில் மாதா சக்தி தெய்வசக்தியாக ஆறு குளம் விருட்சம் போன்ற இடங்களில் வியாபித்து தனது தெய்வீகத்தன்மையை வெளிக்காட்டி அடியவர்களிற்கு அருள்பாலித்துள்ளார். ஆரிய கலாசாரம் தொடங்க முன்னரே சக்தி வழிபாடுகள் இருந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த வகையில் ஈழத்திருநாட்டின் திலகமாய் விளங்கும் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பொலிகண்டி கிராமத்திலே மிகவும் பழைமை வாய்ந்த இந்து ஆலயங்கள் பல உள.
அவற்றிலே இவ்வூருக்கு சிறப்பாய் மத்தியில் அமையப்பெற்ற ஆலயமே பொலிகண்டி மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் ஆலயமாகும்.
இவ்வாலயம் 1800 ஆம் ஆண்டளவில் பொலிகண்டி அதிவீரசிங்கமுதலியார் பரம்பரையில் வந்த கந்தர், வேலர், குமானியர் ஆகியோருக்குச் சொந்தமான மருதாம்புலம் என்னும் காணியில் இருந்த இலுப்பை மர அடியிலே திவ்விய ஒளியாகத் தோன்றி தன்னை அவ்விடத்திலே ஆதரிக்கும்படி கூற கந்தர், மூவேலர், குமானியர் ஆகியோர் சூலம் அமைத்து வழிபட்டு அன்னையின் அருளாட்சி இவ்வூருக்கு கிடைக்கப்பெற்றது.
பத்திரகாளி அனுக்கிரகம் காலவோட்டடத்தில் வியாபித்து இக்கிராமம் மட்டுமல்லாது ஏனைய கிராமங்களுக்கும் கிடைக்கப்பெற்றது. இதனால் அவர்கள் தங்களுடைய நேர்த்திகளை செய்து வழிபட்டுச்சென்றனர். இக்காணி உரிமையாளர்கள் தலைமையில் சுண்ணாம்புக்கல்லினால் ஆலயம் அமைக்க 1875ம் ஆண்டு சங்குஸ்தாபனம் (அத்திவாரமிடல்) செய்து ஆலயம் அமைக்க ஆரம்பித்தார்கள். 1889 ஆம் ஆண்டு திருமுகத்தையும் சூலத்தையும் வைத்து கிராமிய வழிபாட்டு முறைக்கு அமைவாக பூசைகளை செய்து வந்தார்கள். இக்காலத்தில் பூசை வழிபாடுகளை கந்தர் பரம்பரையில் வந்த சிதம்பரப்பிள்ளை செல்லையா ஐயா என்பவர் ஆற்றி வந்தார். அக்காலப்பகுதியில் ஆலயத்தின் தெய்வீகத்தன்மை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சிறப்புற்று வந்தது.
இவ்வூரில் வாழ்ந்த சன்னாசி கந்தையா ஸ்வாமியார் என்பவர் அம்பாளிடத்தே அளவுகடந்த பக்தி கொண்டவராக இருந்ததன் காரணமாக அம்பாளின் திருவருள் பிரசாதம் அவர் மீது வியாபித்து அடியார்களுக்கு கட்டுச் சொல்லுதல், நோய்களுக்கு மருந்து செய்தல் போன்ற தெய்வீகத்தன்மைகளை ஆற்றி வந்தார். இதனால் ஆலயத்தில் அடியார்கூட்டம் அதிகரித்துக்கொண்டெ சென்றது.
தினப்பூசை, வைகாசிப்பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை, தைப்பொங்கல் போன்ற தினங்களை சிறப்பாக செய்து வந்தார்கள். மேற்படி ஆலய பூசகர் காலவோட்டத்தில் வயோதிபம் ஏற்பட்டு கடமை செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது இவருடைய கடமைகளிற்காக இவ்வூரில் வாழ்ந்த சு.ஆ.கனகசபாபதி தேசிகர் அவர்கள் பூசைப் பொறுப்புக்களை ஏற்று நடத்தி வந்தார். இவர் காலத்திலும் ஆலயத்தின் வளர்ச்சி மேலோங்கியது. காலவோட்டத்தில் தெய்வீகத்தன்மை மிகவும் சிறப்பு நோக்கியதாய் இக் கிராமத்தில் உள்ள கந்தவனகடவை முருகப் பெருமான் மானம்பூ உற்சவத்திற்காக இங்கு எழுந்தருளுவார்.
மேலும் பொலிகண்டி இருப்பை மூலை பிள்ளையாரும் இங்கு வந்து வேட்டையாடி செல்வது வழமை. இத்தினங்களில் அம்பாளுடைய ஆலயம் கோலாகலமாக இருக்கும்.
காலம் பல கடந்து சுண்ணாம்புக்கல்லால் அமைக்கப்பட்ட ஆலயம் பழுதடைந்திருந்தமையால் கந்தர் பரம்பரையில் வந்த ஆலயம் புதிதாக அமைக்குமாறு தெய்வீகத்தன்மையினால் உணர்த்தியதன் பேறாக அம்பாளிற்கு ஆலயம் அமைக்க எண்ணினார். இப்படியாக இருக்க பூசைக்கடமைகளை செய்த சு.அ. தேசிகர் கடமையில் இருந்து விலகினார். இந்நேரத்தில் அம்பிகையின் திருவுள்ளமோ என்னமோ யாம் அறியோம். இக்கிராமத்தில் வாழ்ந்த பிரம்ம ஸ்ரீ.சந்தானசர்மா ஐயா (மாப்பிளை ஐயா) என்பவரிடம் பூசைப்பொறுப்புக்களை ஒப்படைத்தார்கள்.
இந்நிலையில் திருமதி.தங்கம்மா அவர்களும் அவருடைய கணவர் சுப்பிரமணியம் நாகலிங்கம் ஆசிரியர் அவர்களும் முன்நின்று திருமதி.தங்கம்மாவிற்கு சொந்தமான மருதாம்புலக்காணியில் மூலஸ்தானம் (கருவறை) அமைக்க 02.09.1960 சர்வாதி வரும் ஆவணி மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.30 -10.30 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனம் செய்தார்கள். இதன்பின் பழைய கோவிலை இடித்து அகற்றி தற்போது இருக்கும் மூலஸ்தானத்திற்கு 05.12.1960 ஆம் ஆண்டு சர்வாதி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை பகல் 12.57 மணிமுதல் 2.31 மணிவரையுள்ள சுபவேளையில் அத்திவார வைபவம் இடம்பெற்றது. கருவறை என்று கூறப்படும் மூலஸ்தானத்தையும் அதனுடன் இணைந்த அர்த்த மண்டபத்தையும் மூலவிக்கிரகம் எழுந்தருளி விக்கிரகம் சிம்மபலிபீடம் ஆகியவற்றை நாகலிங்கம் தங்கம்மா அவர்களின் உபயமாகவும் மகாமண்டபத்தை செல்லப்பா தம்பிராசா அவர் பரம்பரையில் அவருக்குக் கிடைக்கப்பெற்ற மருதாம்புலக் காணியில் கட்டினார்.
தரிசன மண்டபத்தை ஏ.மு.ஏ.வேலும்மயிலும் அவர்களின் உபயமாகவும் தம்ப மண்டபத்தை பொது உபயமாகவும் வைரவரை கிருஸ்ணபிள்ளை மகேஸ்வரி அம்மாவிற்குரிய மருதாம்புலக்காணியில் சி.கிருஸ்ணபிள்ளை உபயமாகவும் தீர்த்தக் கிணற்றினை வாரித்தம்பி தனது காணியில் வெட்டினார். மேலும் மடப்பள்ளியையும் இவர்களே நிறுவினார். மணிக்கூட்டுக் கோபுரம் வதிரி திருமதி. நடராஜா தங்கமணி அவர்களின் உபயமாகவும் சுற்றுமதில் வாகனசாலை களஞ்சியம் மூலஸ்தானம் அர்த்த மண்டபம் நாகலிங்கம் தங்கம்மாவின் உபயமாகவும் செய்தார்கள். இப்படியாக திருப்பணிகள் நடைபெற்று 1977 ம் ஆண்டு சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் மகா கும்பாபிசேகம் செய்ய முகூர்த்த விண்ணப்பம் செய்தார்கள்.
இக்கும்பாபிசேக மூலஸ்தான செலவினங்களை முழுமையாக திருமதி நாகலிங்கம் தங்கம்மா அவர்களே பொறுப்பேற்று செய்து வைக்க பொறுப்பேற்று செய்து வைக்க பத்திரகாளி அம்பாள் திருவருள் பாலித்தார்கள். இத்திருப்பணியில் இவர்களோடு பெரியதம்பி அருணாச்சலம் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இக்கும்பாபிசேக கிரிகைகளை தலைமை தாங்கி நடாத்த இக்கிராம குரு பரம்பரையில் வந்தவரும் பொலிகண்டி கந்தவனக்கடவை பிரதமகுருவான சிவப்பிரமஸ்ரீ க.சோமசுந்தரக்குருக்கள் ஐயா தலைமையில் மாவை ஆதினத்தை சேர்ந்த சிவப்பிரமஸ்ரீ.ஐ.வைத்தியநாதர் குருக்கள் அவர்களால் பக்தி பூர்வமாக மகா கும்பாபிசேகம் செய்து வைக்கப்பட்டது.
கும்பாபிசேகத்தின் போது சு.நாகலிங்கம் ஆசிரியர் அவர்களுடன் அவர்களுக்கு உதவியாக நின்றுதவிய அன்பர் திருவாளர் தம்பிராசா அப்பா அவர்களையும் மறந்துவிடமுடியாது இதன்பின்னர் மூன்று காலப்பூசையையும் சிவராத்திரி பங்குனித்திங்கள் வைகாசி விசாகப்பொங்கல் ஆடிப்பூரத்தைத் தீர்த்தமாக கொண்டு பத்துநாட்கள் அலங்கார உற்சவம் என்பன கொண்டாடப்படுகின்றன.
தீர்த்தோற்சவத்தில் கந்தர் பரம்பரையில் வந்த காசிநாதர் தெட்சணாமூர்த்தி ஆரம்பகாலங்களில் அர்த்த தேவருடன் தீர்த்தமாடினார். அதன்பின் விருத்தாச்சலம் சிவரூபன் அதன்பின் கிருஸ்ணபிள்ளையின் பேரன் கதிர்காமநாதன் கலைமோகன் அந்த நற்காரியத்தை பெரும் பேறாக கருதி செய்து வருகின்றார். மேலும் கேதாரகௌரி வழிபாடு நவராத்திரி கார்த்திகை விளக்கீடு பிள்ளையார்கதை போன்ற நித்திய நைமீத்திய விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன.
1978 ஆம் ஆண்டு வைகாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் விநாயகப்பெருமான் இல்லாத குறையை திருவாளர் வைரமுத்து நடராஜாவும் திருமதி.இராசலட்சுமி அவர்களும் விநாயகப்பெருமானுக்கு கோயில் அமைத்து கும்பாபிசேகம் செய்து வைத்தனர். 1982 ஆண்டு காலப்பகுதியில் செயலாளராக இருந்த இராசா தங்கவேலாயுதம் அவர்களின் முயற்சியினால் ஆடிமாதம் பொதுமக்களின் உபயமாக வசந்த மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு சண்டேசுவரர் உற்சவமூர்த்தி திரு கி.அருள்நாதர் அவர்களின் முயற்சியினால் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்டது. ஆடிப்பூரத்தில் அம்பாள் கந்தவனக்கடவை சமுத்திரத் தீர்த்தமாடி பொலிகண்டி சல்லியம்பதி விநாயகர் ஆலயத்தில் பொலிகண்டி குருகுல மக்களால் நடாத்தப்படும் விசேட பூசைகளை ஏற்று கந்தப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெறும் வழிபாடுகளை ஏற்று மீண்டும் தனது ஆலயத்தினை நோக்கி செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்வாலத்தில் ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை அதிவீரசிங்க வழித்தோன்றலில் வந்தவர்களான திரு.நாகலிங்கம் தங்கம்மா குடும்பம் கிருஸ்ணபிள்ளை கலியுகவரதன் குடும்பம் ஆகியோரால் நாசக வளர்ந்து பானைப்பொங்கல் இன்று வரை நடந்தி வருகின்றது.
1977 ஆம் ஆண்டு முதல் 2005 வரை நடைபெற்ற கும்பாபிசேக மணவாளக்கோல உபயத்தை திருமதி நாகலிங்கம் தங்கம்மா குடும்பத்தவர்களே செய்து வருகிறார்கள். மேலும் 2005 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற பாலஸ்தானத்தின் பின் அலய மூலஸ்தானத் திருப்பணியை திரிதள விமானத்தைக் கொண்டதாகவும் இரட்டைப் பஞ்சாங்க வேலைப்பாடுகளுடன் மூலஸ்தானத்தை அழுகுற அமைவதற்கு சகல செலவீனங்களையும் திரு திருமதி சிவநாதன் பத்திராதேவி குடும்பம் திரு.சங்கர் குடும்பம் திரு.சிவரூபன் குடும்பம் திரு.விவேகானந்தன் குடும்பம் திரு.சபேசன் குடும்பம் ஒன்று சேர்ந்து செய்தார்கள். அது மட்டுமல்லாது கும்பாபிசேகம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாகலிங்கம் மகன் விவேகானந்தனின் மைத்துனரான அப்பாத்துரை சண்முகநாதனும் மூலஸ்தான கும்பாபிசேகத்திற்கு நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நிர்மாண வேலைகள் சிவப்பிரமஸ்ரீ ச.வைத்தியநாதக்குருக்கள் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்டு விகிர்த்தி வருடம் வைகாசி மாதம் 20ம் நாள்(03.06.2010) வியாழக்கிழமை காலை 6.00 – 8.41 வரையுள்ள மிதுன லக்கின சுபமூகூர்த வேளையில் மிகவும் சிறப்பான முறையில் சிவப்பிரமஸ்ரீ ச.வைத்தியநாதக்குருக்கள் அவர்களால் நவகுண்ட மகாகும்பாபிசேகம் மிக விமரிசையாக நடந்தேறியது.
இவ்வாலயத்தில் 1977 அம் ஆண்டு முதல் சுப்பிரமணியம் நாகலிங்கம் வாரித்தம்பி சின்னையா செல்லப்பா தம்பிராசா ஆகியோரின் சந்ததியில் ஒருவரை தலைமைத்துவமாக கொண்ட நிர்வாகமுறை இன்றுவரை பரியாலனம் செய்கின்றது.
பொலிகண்டி மருதாம்புலம் பத்திரகாளியம்மன் அருள் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.
Post a Comment